சென்னை: 2026-27ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்ட தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எந்த பிரச்னைகளை முன்னெடுக்க வேண்டும். விவாதத்தின் போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
இதுதொடர்பாக திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28ம் தேதி(இன்று) மாலை 5 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிதிநிலை அறிக்கை பொருள் குறித்து கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
