சென்னை: சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து சோதனை நடத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் மிகப்பெரிய அளவிலான தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான் குறிப்பிட்ட அந்தப் பயணிகள் விமானம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
வடமாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பயணியிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அவர் டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டு, மறுநாளே சென்னைக்கு வந்து இறங்கியது தெரியவந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவருடைய உடைமைகளைச் சோதனை செய்தபோது, சூட்கேசில் இருந்த ரகசிய அறையில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து 24 கேரட் சுத்த தங்கமான 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 5 கோடி 80 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த கடத்தலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
