டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஜந்தர் மந்தர் எதற்காக கட்டப்பட்டது என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வானியல் ஆராய்ச்சிக்காகவும், நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காகவும் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட அறிவியல் கண்காணிப்பகம் தான் ஜந்தர் மந்தர்.
1728 முதல் 1734 வரையிலான காலகட்டத்தில், ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ஜெய் சிங் இதைக் கட்டினார். வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், அக்காலத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகள் தொடர்பான கணக்கீடுகளை மேலும் துல்லியமாக்க விரும்பினார். இதற்காக டெல்லி மட்டுமின்றி, ஜெய்ப்பூர், உஜ்ஜயினி, வாரணாசி மற்றும் மதுரா ஆகிய ஐந்து நகரங்களிலும் இதுபோன்ற வானியல் ஆய்வு மையங்களை அமைத்தார்.
அவற்றில் மிகவும் முக்கியமானது சம்ராட் யந்திரம் எனப்படும் 27 மீட்டர் உயரமுள்ள முக்கோண வடிவ சூரியக் கடிகாரமாகும். இதன் சாய்வுப் பகுதி, பூமியின் அச்சுக்கு இணையாக வட துருவத்தை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
சூரியன் வானில் நகரும் போது, இந்த அமைப்பின் நிழல் இருபுறமும் உள்ள வளைந்த அளவுகோல்களில் விழுகிறது. அந்த நிழலை அடிப்படையாகக் கொண்டு மணி, நிமிடம், வினாடி ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
1700-களின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருந்தாலும், தெளிவான வானிலை நிலவும் நாட்களில் இந்தக் கருவியால் சுமார் இரண்டு வினாடிகள் வரை துல்லியமாக நேரத்தைக் கணக்கிட முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாகும். இது சூரிய நேரத்தை அடிப்படையாகக் கொண்டதால், தற்போதைய இந்திய நிலையான நேரத்துடன் ஒப்பிடும்போது சிறிய திருத்தம் தேவைப்படும்.
நவீன தொலைநோக்கிகள் எதுவும் இல்லாத காலத்தில், கற்கள், பளிங்கு மற்றும் சுண்ணாம்புக் காரை போன்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்தி இந்தக் கண்காணிப்பகம் உருவாக்கப்பட்டது. அளவீட்டுப் பிழைகளை குறைக்கும் நோக்கில், கருவிகள் மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டன.
சந்திரன், சூரியன் மற்றும் கிரகங்களின் நகர்வைக் கண்காணிப்பதற்கும், கிரக நிலைகளைத் துல்லியமாகக் கணித்து நாட்காட்டிகளை உருவாக்குவதற்கும் இந்த மையம் பயன்படுத்தப்பட்டது.
சுமார் மூன்று நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், இன்றளவும் தெளிவான வானிலை நிலவும் நாட்களில் இந்த சூரியக் கடிகாரம் மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டுவது, ஜந்தர் மந்தரின் மிகப் பெரிய சிறப்பாகக் கருதப்படுகிறது.
