கள்ளக்குறிச்சி: நடுரோட்டில் அரை நிர்வாணமாக படுத்து ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலேரி பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (29), லாரி டிரைவர். இவர் நேற்று திடீரென குடிபோதையில் அப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் அரை நிர்வாணத்துடன் கட்டிலை நடுரோட்டில் போட்டு ஜாலியாக படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த வழியே வந்த பேருந்துகள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் வரிசையாக அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அப்போது அவரிடம் தம்பி எழுந்திருப்பா… வழி விடுப்பா… என வாகன ஓட்டிகள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும், போதை ஆசாமி கட்டிலை விட்டு நகரவே இல்லை. நான் இங்கதான் படுப்பேன்… என பிடிவாதம் பிடிக்க, பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் அவரை கட்டிலில் இருந்து தூக்கி விட்டு அதை அகற்றினர். இருப்பினும் அந்த வாலிபரோ, கட்டில் இல்லாவிட்டால் என்ன, ரோட்டில் படுப்பேன் என புலம்பியபடி கீழே படுக்கவே கொதித்தெழுந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவரை ‘‘சிறப்பாக கவனித்தனர்’’. இதையடுத்து அங்கிருந்து வாலிபர் ஓட்டம் பிடித்தார். அதன்பிறகே அங்கு ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து படிப்படியாக சீரானது.
இச்சம்பவத்தை அவ்வழியாக சென்றவர்களில் சிலர், தங்களது செல்போனில் படம்பிடித்த நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே முத்தையன் மீது பொதுசொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிந்த சங்கராபுரம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கள்ளக்குறிச்சி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
