கலெக்டர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி வீணாகும் அரசு வாகனங்கள்

 

திருப்பூர், ஜூலை 27: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு வாகனங்கள் பயன்பாடின்றி துருப்பிடித்து வீணாகி வருகின்றன. அரசு துறைகளின் தினசரி செயல்பாடுகள், கள ஆய்வுகள் மற்றும் அவசரக் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த வாகனங்களுக்கு, போதிய பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, பல வாகனங்கள் நீண்டகாலமாக ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே காட்சிப் பொருளாக மாறி நிற்கின்றன.

மேலும், அவசரத் தேவைகளின்போது துறை சார்ந்த அதிகாரிகள் வாகனங்களை எடுத்துச் செல்லும்போது, அவை பாதியிலேயே பழுதடைந்து நிற்பதும், ஸ்டார்ட் ஆகாமல் ஆங்காங்கே முடங்குவதுமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனால் முக்கிய ஆய்வுகள் மற்றும் அவசரப் பணிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் தாமதமாவதோடு, அதிகாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட அரசு சொத்துக்கள் இப்படி வீணாகப் பாழாவதைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, வாகனப் பராமரிப்பிற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, பழுதடைந்த வாகனங்களை விரைவாகச் சீரமைக்க வேண்டும் என அரசு அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Related Stories: