சேலம், ஜூலை 27: சேலத்தில் விதிமுறையை மீறி செயல்பட்ட 4 மருந்து கடைகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல்லில் ஒரு சில மருந்து கடைகளில், வலி நிவாரணி மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவது, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. வலி மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி, வழங்குவதை தடுக்கும் வகையில் அந்த மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சேலத்தில் மருந்து கடையில் சோதனை செய்த அதிகாரிகள், அதில், ஒரு மருந்து நிறுவனத்தின் மருந்து தரமற்றது என கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தரமற்ற மருந்தை விற்பனைக்கு கொடுத்த மருந்து நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 மருந்து கடைகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சேலத்தில் மிக்சர், டம்ளர் விற்ற மருந்து கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைை மீறி செயல்படும் மருந்து கடைகள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருந்து கடைகளில் தூக்க, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி கொடுக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
