சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவியில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 632 தேர்வர்கள் மெயின் தேர்வு (முதன்மை) எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு இன்று முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. அதாவது காலடிப்பேட்டை செயின்ட் பால்ஸ் மகாஜன மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை முருகா தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் வள்ளல் எட்டியப்பா நாயக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தேர்வு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
