மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு: போதுமான அளவுக்கு மக்கள்தொகை இல்லை என கைவிரிப்பு: பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த யோசனை

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயிலுக்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என்று யோசனை வழங்கியுள்ளது. சென்னையில் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் என்பது மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. பெரும்பாலான பயணிகள் போக்குவரத்திற்கு மெட்ரோ ரயிலை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதைபோன்று மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது.

27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே வழங்கியது. இதையடுத்து, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பரில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், மதுரை – கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம்; மாநகர போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தலாம் என்று ஒன்றிய அரசு யோசனை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதால், இந்த இரண்டு நகரங்களிலும் நேரத்தை மிச்சப்படுத்த முடியாது எனக் கூறியிருக்கிறது.

Related Stories: