பாமகவை அன்புமணியிடம் ராமதாஸ் ஒப்படைப்பு; என்.ஆர்.காங்கிரசில் இணைந்த மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன்

புதுச்சேரி: பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே இருந்து வந்த மோதல், ‘அரசியலில் இருந்து விலகுவதாக’ நிறுவனர் ராமதாசின் அறிவிப்பு மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இது பாமக கட்சியினரிடையே வரவேற்பை பெற்றாலும், இக்கட்டான நேரங்களில் ராமதாசுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் இதுவரை ராமதாஸ் அணியில் இருந்த, தமிழக முன்னாள் எம்எல்ஏ அருள், அன்புமணியின் தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறியதுடன் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து, என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததுடன், தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். முதல்வர் ரங்கசாமியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுபோல், ராமதாஸ் அணியில் செயல் தலைவராக இருந்த மகள் காந்தி, பேரன் முகுந்தன் ஆகியோரும் புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து என்.ஆர் காங்கிரசில் இணைந்தனர்.

தந்தை, மகன் மோதலின் போது ராமதாஸ் பக்கம் நின்ற பலரது நிலை இன்றைய நிலையில் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. ஜி.கே. மணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டனர். மேலும், தன்னை நம்பி வந்தவர்களின் கருத்துகளை கேட்காமல் ராமதாஸ், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது பலருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் அனைவரும் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிற கட்சிகளில் இணைய உள்ளதாக தெரிகிறது.

Related Stories: