சேலம், ஜூலை 23: ஆடிப்பெருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நேற்று காலை கொடியேற்று விழா நடந்தது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி, கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா எடுக்கப்படும். இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு கோலாகலமாக பூச்சாட்டுதல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றும் விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஆடிப்பெருவிழாவில் வரும் 28ம் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடுதல், 29ம் தேதி மாலை 5 மணிக்கு பவுர்ணமி 108 திருவிளக்கு பூஜை, ஆகஸ்ட் 3ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆடி 18ம் தேதி சிறப்பு பூஜை, இரவு ஊஞ்சல் உற்சவம், சக்தி அழைப்பு, 4ம் தேதி காலை 8 மணிக்கு சக்தி கரகம் நடக்கிறது. 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பொங்கல், மாவிளக்கு வைத்தல், உருளுதண்டம், பிரார்த்தனை நடைபெறும். 7ம் தேதி காலை 9.15 மணிக்கு 2ம் ஆண்டு தேரோட்டம், 8ம்தேதி அதிகாலை கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் சேர்த்தல், 10ம் தேதி அதிகாலை சப்தாபரணம் திருவீதி உலா, மாலை மஞ்சள் நீராட்டு, 11ம் தேதி காலை 10மணிக்கு பால்குட விழா, மாலை 5மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
