×

மாலை 4.30க்கு தொடக்கம்; ஹராரேவில் முதல் டி20 போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே இன்று மோதல்

ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடர்களில், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான உலக சாம்பியன் இந்திய அணி முறையே 0-2, 0-4 என படுதோல்வியை சந்தித்தது.

கில் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரையும் 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், இந்திய அணி அடுத்து ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஹராரேவில் இன்று மாலை 4.30க்கு தொடங்கி நடைபெறும் நிலையில், அடுத்த 2 போட்டிகளும் இதே மைதானத்தில் ஜூலை 25, ஜூலை 26ல் நடைபெற உள்ளன.

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஷ்ரேயாஸ் வழிநடத்திய 7 போட்டியில் 6 தோல்வி கண்டுள்ளதால் (ஒரு போட்டியில் முடிவு இல்லை) அவர் கடும் நெருக்கடியுடன் ஜிம்பாப்வே தொடரை சந்திக்கிறார். ஜிம்பாப்வே டூர்களுக்கு ஏ அணி வீரர்களையே அதிகம் தேர்வு செய்து அனுப்புவது வழக்கம் என்ற நிலையில், இம்முறை முழு பேட்டிங் பலம் வாய்ந்த அணி சென்றிருப்பது ஷ்ரேயாஸ் வெற்றிக் கனியை ருசிக்க சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். கேப்டனாக சொதப்பினாலும், பேட்டிங்கில் ஷ்ரேயாஸ் ஓரளவுக்கு நல்ல பார்மில் இருப்பது அணிக்கு கை கொடுக்கும்.

ஐபிஎல் தொடரில் அமர்க்களப்படுத்தி சீனியர் டி20 அணியில் இடம் பிடித்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டியில் 14, 13, 15 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி டி20ல் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜிம்பாப்வே தொடருக்கு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாத நிலையில், தொடர்ச்சியாக 3 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வைபவ் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் உள்ளார்.

இதே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய யு-19 உலக கோப்பை பைனலில் சூரியவன்ஷி 80 பந்தில் 175 ரன் (15 பவுண்டரி, 15 சிக்சர்) விளாசியுள்ளதால், அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளையும் வைபவ் வென்றது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஜோப்ரா ஆர்ச்சர் அளவு குறைவாக வீசிய பவுன்சர் பந்துகளை சமாளிக்க முடியாமல் வைபவ் அவுட்டான விதம், ஜிம்பாப்வே வேகங்கள் ரிச்சர்ட் என்காரவா, பிளெஸ்ஸிங் முஸரபானிக்கு வியூகம் அமைக்க உதவும்.

அதிரடி வீரர் ரிங்கு சிங் சமீபத்திய சரிவுகளில் இருந்து மீண்டு, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த தொடரை பயன்படுத்திக்கொள்வார் என நம்பலாம். திலக், அபிஷேக், துபே அதிரடியை சமாளிப்பது ஜிம்பாப்வே பவுலர்களுக்கு சவால் தான்.

மயாங்க் யாதவ், அஷோக் ஷர்மா, யஷ் தாகூர் வேகப் பந்துவீச்சும் தேர்வுக் குழுவினரின் கவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய தொடர்களில் ஜிம்பாப்வே சிறப்பாக செயல்பட்டது, அந்த அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு கூடுதல் சாதகம்.

* இந்தியா: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், இஷான் கிஷன், வைபவ் சூரியவன்ஷி, ரிங்கு சிங், திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஷிவம் துபே, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, அஷோக் ஷர்மா, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், மயாங்க் யாதவ், யஷ் தாகூர்.

* ஜிம்பாப்வே: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), பென் கரன், டடிவனஷே மருமானி, டியான் மையர்ஸ், மில்டன் ஷும்பா, டபாட்ஸ்வா ட்சிகா, பிரையன் பென்னட், ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், வெஸ்லி மாதெவெரே, டனகா சிவாங்கா, வெலிங்டன் மசகட்ஸா, பிளெஸ்ஸிங் முஸரபானி, ரிச்சர்ட் என்காரவா, நியூமன் நியாம்ஹுரி,

Tags : T20 ,Harare ,India ,Zimbabwe ,Harare Sports Club Ground ,Ireland ,England ,Shreyas Iyer… ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒன்டே: 2...