கொழும்பு: இந்தியா யு19 அணியுடனான 2வது டெஸ்டில், 472 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கைத் துரத்தும் இலங்கை யு19 அணி 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து போராடி வருகிறது. பிரேமதாசா அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா யு19 அணி 411 ரன் குவித்த நிலையில் (குஷக்ரா 111, மானல் சவுகான் 150, கேப்டன் யஷ்பர்தன் 78), இலங்கை யு19 அணி 148 ரன்னில் சுருண்டது.
263 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய இளைஞர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. லக்ஷியா ராய்சந்தானி 100 ரன், மானல் சவுகான் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து,472 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை யு19 அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் மகாவிதனா 0, அவீஷ் சமஷ் 2 ரன்னில் வெளியேற, விரான் சமுதிதா 31 ரன், செனுஜா வெகுனகோடா 64 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் விமத் தின்சரா 55 ரன், கவிஜா கமகே 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இலங்கை யு19 அணி வெற்றிக்கு இன்னும் 317 ரன் தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
