×

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக போராடுபவர்களை அடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது: சண்முகம் பேட்டி

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் கம்பனி ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு நேற்று ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ எந்த காரணம் கொண்டும் தமிழகத்திலே கால் ஊன்றிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெக ஆட்சியமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம்.

யாரை வேண்டுமானாலும் அமைச்சராக வைத்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு முழு உரிமை இருக்கிறது. ஆகவே அதிலெல்லாம் நாங்கள் தலையிடவில்லை. நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட அவைகளுக்கு காரணமாக இருந்த ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுகின்ற போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, காவல்துறையை ஏவி ஒடுக்குவது, அடக்குவது, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டி அடிப்பது போன்ற மோசமான நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறை ஈடுபட்டு வருகிறது என்பது வண்மையாக கண்டிக்கத்தக்கது.

போராட்டத்திற்கான இடங்களை ஒதுக்கி தந்து, இந்த போராட்டங்கள் ஜனநாயகப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நடைபெறுவதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும் தமிழகத்திலே உருவாக்க வேண்டும். மீறி அடக்குமுறையின் மூலமாக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று தமிழ்நாடு அரசாங்கம் நினைத்தால், அடக்குமுறையை தூள் தூளாக்கக்கூடிய நடவடிக்கையில் தமிழ்நாட்டினுடைய மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delhi ,Shanmugam ,Patalur ,Vijayagopalapuram, ,Alathur taluka, Perambalur district ,Communist Party of India ,Marxist ,State ,P. Shanmugam ,BJP… ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...