×

ஏற்கனவே தப்பிய வழக்கில் ஆஜராக வந்த கைதி தப்பி மீண்டும் ஓட்டம் 2 எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (39). இவர் மீது மகுடஞ்சாவடி, மல்லூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன. நரேஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் 2020ம் ஆண்டு கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நரேஷ்குமார், அங்கு மருத்துவர்களை மிரட்டி தப்பி சென்றார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் அவர், ேபாலீசாரால் சேலத்துக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3ல் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி மற்றும் தலைமை காவலர் ஜெகதீசன் ஆகியோர் நரேஷ்குமாரை மீண்டும் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம் நெடுஞ்சாலையில் தேநீர் அருந்துவதற்காக போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நரேஷ்குமார் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடி விட்டார். தப்பியோடிய கைதியை பிடிக்க ஏட்டு ஜெகதீசன் துரத்திச் சென்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. காயமடைந்த அவர், உடனடியாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைதி தப்பியோடியது குறித்து சேலம் மாநகர போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. மாநகர், மாவட்ட போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தப்பியோடிய தண்டனை கைதி நரேஷ்குமாரை பெருந்துறை போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்‌. இதற்கிடையே, தண்டனை கைதி தப்பிய விவகாரத்தில், சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய எஸ்எஸ்ஐக்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி மற்றும் ஏட்டு ஜெகதீசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags : 2 SI ,Salem ,Naresh Kumar ,Diwati Patti, Salem District ,Mahudanjavadi ,Mallur ,Nareshkumar Khoi ,Salem Government Hospital ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...