×

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது திமுக எம்எல்ஏவின் ஜாமீன் மனு தள்ளுபடி: போலீஸ் கஸ்டடி கேட்ட மனுவும் நிராகரிப்பு

தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மற்றும் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல் துறையின் மனு ஆகியவற்றை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் கடந்த 18ம் தேதி இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் தவெகவினர் புகார் அளித்தனர்.

இதன் பேரில் கடந்த திங்கட்கிழமை மார்க்கண்டேயன் எம்எல்ஏவை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் சுமார் 11 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு தூத்துக்குடி 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் ஜாமீன்கோரி தூத்துக்குடி 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்த்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் 2 நாள் காவலில் விசாரிக்க ்அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நேற்று பிற்பகலில் நடந்தது. எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, காவல்துறையின் மனு மற்றும் எம்எல்ஏவின் ஜாமீன் மனு ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : DMK ,MLA ,Thoothukudi ,Thoothukudi court ,Markandeyan ,Chief Minister ,Vijay ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...