திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர். பவுர்ணமிக்கு இணையாக, ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில பக்தர்களின் வருகை இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அதனால், தரிசனத்திற்கு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, வெளி மாநில பக்தர்களை குறி வைத்து சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்வதாக பணம் வசூலிக்கும் இடைத்தரகர்களின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று அண்ணாமலையார் கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள தரிசன வரிசையின் வாயிற் கதவின் பூட்டை சந்தேகத்துக்குரிய நபர் திறந்து ஐந்து பக்தர்களை குறுக்கு வழியில் அனுமதித்துள்ளார்.
சிசிடிவி கேமிரா கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதனை கண்காணித்த ஊழியர்கள், உடனடியாக விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, திருவண்ணாமலை வேங்கிக்கால் குபேர லிங்கம் 3வது தெருவை சேர்ந்த சரண்ராஜ்(38) என்பது தெரியவந்தது. மேலும், கோயில் ஊழியர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பக்தர்களை தரிசனத்துக்கு அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்காக ரூ.3 ஆயிரம் பணம் வசூலித்து இருப்பதும், போலியான சாவியை கொண்டு பூட்டுகளை திறந்து இருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, திருவண்ணாமலை டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
