×

மேகதாது துவங்கி மின்வெட்டு பிரச்னை வரை ஸ்கிரிப்ட் இல்லாமல் விவாதிக்க தயாரா? விஜய்க்கு அதிமுக மாஜி அமைச்சர் சவால்

மதுரை: மேகதாது, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, மின்வெட்டு பிரச்னைகளை ஸ்கிரிப்ட் இல்லாமல் வாயைத் திறந்து ஒரே மேடையிலே விவாதிக்க விஜய் தயாரா? என அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: விஜய்க்கு கூட்டணி கட்சிகள் பல்லாக்கு தூக்கி, பாசுரம் பாடி வருகின்றன.

தேர்தலுக்கு முன்பாக விஜய்யை விமர்சித்தவர்கள் இன்றைக்கு புதிய உறவுக்கு நியாயம் கற்பித்திட கற்பனைக் கதைகளை அளந்து விடுகின்றனர். விஜய் தலைமையிலான தவெக அரசு வெறும் கவர்ச்சியும், வசீகரமும் உள்ள சைனா பொம்மை. இந்த பொம்மையை பயன்படுத்தும்போதுதான் இதன் ஆயுள் அற்ப ஆயுள் என்பது நமக்குப் புரியும். விஜய் அரசின் ஆயுட்காலம் எண்ணப்படுகிறது. இது ஜோசியமல்ல. கள நிலவரத்தை பகிர்கிறேன்.

பழநி கோயில் நிலம் பத்திரப்பதிவு முதல் பணி மாறுதல் வரை எல்லாமும் திட்டமிட்டு திரைக்கதை போல நடந்துள்ளது. இதற்கு இதுவரை விஜய் விளக்கம் சொல்லவில்லை. ஏனெனில் ஸ்கிரிப்ட் இன்றி அவரால் பேச முடியாது. பெரிய அதிகார பலமின்றி, சட்டவிரோதமாக கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து விடமுடியுமா?

அந்த அதிகாரம் மையம் யார் என்ற கேள்விக்கு ஸ்கிரிப்ட் இன்றி பதிலளிக்க விஜய் தயாரா? நான் சவால் விடுகிறேன். மேகதாது, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, மின்வெட்டு பிரச்சனைகளை ஸ்கிரிப்ட் இல்லாமல் வாயைத் திறந்து கருத்துக்களை எடப்பாடி பழனிசாமியிடமோ, என்னிடமோ ஒரே மேடையிலே விவாதிக்க விஜய் தயாரா? இவ்வாறு பேசியுள்ளார்.

Tags : Megedathu ,AIADMK ,minister ,Vijay ,Madurai ,Palaru ,Mullaperiyar ,Katchatheevu ,Udayakumar ,Vijay… ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...