சென்னை: சென்னை வேல்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்களுக்கு தடை கோரி அவரின் சகோதரியும், வேல்ஸ் அறக்கட்டளையின் ஆயுள் கால அறங்காவலருமான அழகு தமிழ் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் நினைவாக கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை வேல்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் ஐசரி கணேசன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு தனக்கும் சில அறங்காவலர்களுக்கும் தெரியாமல் வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களை குறைக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்துள்ளனர். சில அறங்காவலர்களின் ராஜினாமா கடிதங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு அவர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வேல்ஸ் அறக்கட்டளையில் ஏகமனதான ஒப்புதல் இன்றி செய்யப்பட்ட இந்த திருத்தங்கள் செல்லாது என்றும் வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும். அறக்கட்டளையை நிர்வகிக்க இடைகால நிர்வாகி ஒருவரை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
