வாணியம்பாடி அருகே பஸ் நிறுத்தத்தில் பரபரப்பு இளைஞர்களிடையே திடீர் மோதல் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்குதல்

*போதையில் தொடரும் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பஸ் நிறுத்தத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போதையில் தொடரும் மோதல் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் பகுதியையொட்டிய தேசிய நெடுஞ்சாலையோரம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத வாணியம்பாடி கூடுதல் பஸ் நிலையம், தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைகள், மற்றும் செட்டியப்பனூர் பகுதியில் நெடுஞ்சாலையொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தை ஒட்டிய இடங்களில் தினந்தோறும் மாலை நேரத்தில் மது அருந்துவதற்காக மதுப்பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து திறந்தவெளி பாராக காட்சியளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திறந்தவெளி பகுதிகளில் அமர்ந்து மது அருந்தும் மது பிரியர்களுக்கிடையே அவ்வப்போது வாய் தகராறு, தள்ளுமுள்ளு, அடிதடி மோதல்கள் ஏற்படுவதாகவும், இதனால் மாலை நேரங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக பெண்கள் ஒரு வித அச்சத்துடனே காத்திருக்கும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள நெடுஞ்சாலையொட்டிய பஸ் நிறுத்தம் பகுதியில் கூடியிருந்த இளைஞர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் மோதல் உருவாகி ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதனால் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டதால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பலர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மேலும் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் மோதல் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். எனவே திறந்தவெளியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தும் மது பிரியர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பொது இடங்களில் மது அருந்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: