திருமலை: ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் பதிவாகியுள்ளது. நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 19ஐ எட்டியுள்ளது.
அதிகபட்சமாக ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டூர், காக்கிநாடா மாவட்டங்களில் தலா 2 பேரும், விசாகப்பட்டினம், ஏலூர், நெல்லூர் மற்றும் என்.டி.ஆர் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய பாதிப்புகளுக்கு ‘ஒமிக்ரான் ஆர்.எப்.5’ வகை வைரஸ் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கொரோனாவால் இறந்த 4 பேர், தொற்று ஏற்பட்ட 25 நாட்களில் இறந்தனர். இருப்பினும், அவர்கள் நாள்பட்ட உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள். புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
‘ஒமிக்ரான் ஆர்.எஃப்.5’ வகை வைரஸால் பரவி, கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மருத்துவமனைகளும் தேவையான மருந்துகள், பரிசோதனை கருவிகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மக்கள் கவனமாக இருக்கவேண்டும். அலட்சியம் வேண்டாம் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
