தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

திருநெல்வேலி: கட்டில், மெத்தை என நவீன படுக்கைகள் சந்தையை ஆக்கிரமித்தாலும், கோரைப் புற்களால் நெய்யப்படும் பத்தமடை பாய்களின் மதிப்பும், மவுசும் இன்றளவும் குறையவில்லை.

மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா போன்றவை அந்தந்த பகுதியின் அடையாளமாக இருப்பதுபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் பெருமையாக விளங்குவது பத்தமடை பாய்கள். பத்தமடை கிராமத்தில் தாமிரபரணி நதிக்கரையில் விளையும் கோரைப் புற்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாரம்பரிய கைவினைப் பொருட்கள், துணியைப் போல மடிக்கக்கூடிய மென்மை மற்றும் குளிர்ச்சிக்குப் பெயர் பெற்றவை.

ஆறு தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் பத்தமடை கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள், ஒரு பாய் தயாரிக்க சுமார் ஐந்து நாட்கள் ஆகும் என்றும், அதன் தரம் மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை விற்பனையாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கணவன், மனைவி அல்லது காதலர், காதலியின் பெயர்கள், உருவப்படங்கள், பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களையும் பாய்களில் நெய்து வழங்குகின்றனர். வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்பு, நிறம் மற்றும் முறையில் தனிப்பயன் பாய்களையும் தயாரித்து கொடுக்கின்றனர்.

இந்தக் கைவினைத் தொழில் குறித்து பெண்கள் கூறுகையில், “பல பாரம்பரிய தொழில்கள் அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் மறைந்து வருகின்றன. ஆனால் எங்கள் தொழிலை எங்கள் பிள்ளைகளும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு உரிய அங்கீகாரமும், சந்தை வாய்ப்புகளும் அதிகரிக்க வேண்டும்,” என்றனர்.

பாய் தயாரிப்புக்காக கோரைப் புற்கள் முதலில் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டு, பின்னர் உலர்த்தப்பட்டு பல்வேறு வண்ணங்களில் சாயம் ஏற்றப்படுகின்றன. அதன் பிறகே வண்ணமயமான பாய்கள் நெசவு செய்யப்படுகின்றன.

குடிசைத் தொழிலாக நடைபெறும் இந்தப் பாய் நெசவுத் தொழிலுக்கு போதிய இடவசதி இல்லாதது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பத்தமடை பாய்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், “பெண்கள் இணைந்து தொழில் செய்ய எங்களுக்கு தனியான பணியிடம் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக இடவசதி இல்லாமல் சிரமப்படுகிறோம். அரசு எங்களுக்கு நிரந்தரமாக ஒரு பணியிடத்தை அமைத்துத் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாரம்பரியமான இந்தக் கைவினையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விடுமுறை நாட்களில் பாய் தயாரிப்பு குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்களையும் பாய்களில் நெய்து வழங்கும் வசதியும் உள்ளது.

நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும், பத்தமடை பாய்களின் பாரம்பரிய மதிப்பும், பயன்பாடும், தனித்துவமும் இன்றளவும் மாறாமல் தொடர்கின்றன.

Related Stories: