பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி : ஊட்டியில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார். இதில், ரேஷன் கடைகள் மூலம் செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதிய நிபந்தனைகளை முழுவதுமாக தளர்த்த வேண்டும். நிதி பயன்கள் பெறாமல் உள்ள பணியாளர்களுக்கும் நிதி பயன்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். கடந்த 2021ம் ஆண்டுக்கு பின்னர் பணி ஓய்வுபெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட வேண்டும்.

வெளி மாவட்டங்களில் பணி புரிவோர் அனைவருக்கும் இடமாறுதல் செய்திட எளிமையான நடைமுறை உருவாக்க வேண்டும். பணியாளர்களுக்கு பணிக்கொடை அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.25 லட்சம் உயர்த்தி அனுமதிக்கப்பட வேண்டும்.

சங்க செயலாளர்களுக்கு குறைந்தபட்ச நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: