சென்னை: சாலையில் வசிப்போருக்கு வீடு வழங்கக் கோரிக்கை தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரத்தில் வசித்து வரும் தங்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இன்று அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பொதுமக்கள் தங்களின் மாற்று வீடு கோரிக்கை தொடர்பான மனுவை முதலமைச்சரிடம் நேரடியாக வழங்க தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காததால், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.
மனு அளித்து பல நாட்களாகியும் தங்களது கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஏமாற்றமடைந்த அவர்கள் தற்போது தலைமைச் செயலகம் முன்பாக குடும்பத்துடன் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, தங்களது கோரிக்கை குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உடனடியாக மாற்று வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
