விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V.மார்க்கண்டேயன் இன்று அதிகாலையில் தவெக அரசின் காவல்துறையால் அராஜகமான முறையில் ஜனநாயக விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. விளாத்திகுளம் தொகுதி மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்று மக்கள் ஊழியராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். அனைத்து தரப்பு பொதுமக்களிடம் நல்ல உறவை பராமரித்து வரும் மார்க்கண்டேயன் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நமது நாட்டின் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம் பேச்சுரிமை தனிமனித உரிமை என எல்லாவற்றையும் அராஜகமான முறையில் மீறுகிறது தவெக அரசு. விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியற்ற அரசு கைது செய்வதன் மூலம் திமுகவினரை அடக்கி விடலாம் என்று பகல் கனவு காணுகிறது. எந்த வகையிலும் அச்சுறுத்தி பணிய வைக்கலாம் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வன்புணர்ச்சி செய்தவர்களை காப்பாற்றுவதாக சொந்த கட்சியைச் சார்ந்த பெண் புகார் கொடுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் இவ்விபரத்தை எழுப்பியும் அந்த எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு திமுக உறுப்பினர்களை அராஜகமான முறையில் கைது செய்கிறது. மாநிலம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க கைது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் தொடர் கதையாக இருக்கிறது. சர்வாதிகார முறையில் செயல்படும் தவெக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: