பெரம்பலூர், ஜூலை 20: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் சேர இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாதேஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமானம், உடல் உழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் நல வாரியம் உட்பட 15 நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து ஊனம், விபத்து மரணம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்ட வருகின்றன.
நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்ய 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் தங்களின் தொழிலின் அடிப்படையில், நலவாரிய உறுப்பினர்களாக விண்ணப்பிக்கலாம் தங்களுடைய பதிவு விண்ணப்பம் தொழிலாளர் உதவியாளர் இணைய தளத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் தங்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள < //tnuwwb.in.gov.in/ > என்ற இணையதளம் மூலம் சேவை வழங்கப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில் செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் மேற்கண்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நலவாரியத்தில் உறுப்பினராக தங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களது தகவல்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள கணினி மையம், இ- சேவை மையம், சிஎஸ்சி கணினி மையம் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு ரோவர் ஆர்ச் அருகில், ரோவர் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள உழைப்பாளர் நலக்கூடம் (காலை 7:00 மணி முதல் 11 மணி வரை) அல்லது ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிட வளாகம், மாவட்ட விளையாட்டு அரங்கம் கிழக்கே அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விவரங்களை கேட்டறியலாம். மற்றும் 04328-299080 என்ற தொலைப் பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இணையதளம் மூலமாக நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேப்பு மனுக்கள் செய்ய எந்த ஒரு கட்டணமும் இல்லை என்று தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
