அரியலூர், ஜூலை 28: பொய்யாத நல்லூர் கிராமத்தில் அரசு தேர்தல் வாக்குறுதி படி விவசாயப்பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று மஞ்சள் தாலி கயிறுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் அடுத்த பொய்யாதநல்லூர் கிராமத்தில் தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று மஞ்சள் தாலி கயிறுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கூட்டுறவு வங்கிச் செயலரிடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தாய்மாமன் சீருக்கு தரும் முக்கியத்துவத்தை, பயிர் கடன் தள்ளுபடியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அக்கறை காட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் இலுப்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் நீலமேகத்திடம் 300 மனுக்களையும், 5 பக்கத்தில் தயாரிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்கான சாத்திய அறிக்கையும் வழங்கி, இதனை தமிழக முதல்வருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைக் குழு துணைத் தலைவர் இராவணன், சமூக ஆர்வலர் தங்க. இராமலிங்கம், விவசாய சங்க நிர்வாகிகள் சிதம்பரம், அருள், வைத்திலிங்கம், இராமலிங்கம், மண்ணுழி பாரிவள்ளல் மற்றும் பொய்யாதநல்லூர், இலுப்பையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.கூட்டுறவு வங்கி செயலரிடம் 300 மனு அளித்தனர்
