×

ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் தலைமை செயலாளர் சாய்குமார் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்

 

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரது பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் 23ம் தேதி, சாய்குமார் புதிய தலைமை செயலாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். இதனிடையே, தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிகாலம் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், சாய்குமாரின் பதவி காலத்தை நீட்டிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது என்பது பிற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வை பாதிக்கும். இதனால் சாய்குமாரின் பதவி நீட்டிப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டு புதிய தலைமை செயலாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் முதல்வர் விஜய் அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் சாய்குமாரின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய அனுமதி கோரிய தமிழக அரசுக்கு, ஒன்றிய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கி உள்ளது. தற்போது தலைமை செயலாளராக பதவி நீட்டிப்பு பெற்றுள்ள சாய்குமார், 1990ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,

பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பல ஆண்டுகளாக வகித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மை செயலாளராகவும் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Secretary ,Saikumar ,Union government ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu Assembly ,
× RELATED கிருஷ்ணகிரியில் நில அதிர்வு