சென்னை: காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்லவன் சாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்தது அரசியல் நாடகம் என்கிறார் மாணிக்கம் தாகூர். ஆளுநர் நடவடிக்கை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அவரிடம் மனு கொடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் மனு கொடுத்தால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதா என்று கேட்பார்கள் அதற்காக கொடுத்தோம்.
மாணிக்கம் தாகூருக்கு இந்த நடைமுறைகள் எல்லாம் தெரியாது. இவர் திடீரென்று அரசியலில் மேலே வந்தவர். ரவீந்திரநாத் தாகூரின் பேரன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். மாணிக்கம் தாகூர் என்பதை மறந்து விட்டார். திமுககாரர்களிடம் விளையாடினால் வேறு மாதிரி எல்லாம் பேசுவோம். காமராஜர் இறக்கும் வரை அவருடன் இருந்துவிட்டு, அவர் இறந்து நான்கு மாதத்தில் அவரை சிறையில் வைத்த இந்திரா காந்தியுடன் சேர்ந்தவர்கள் தான் இந்த காங்கிரஸ் கூட்டம் என்று கூறினார்.
