கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் ஒன்றிய அரசு முக்கிய திருத்தம்: அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி

 

புதுடெல்லி: கொத்தடிமை தொழிலாளர்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் ஒன்றிய அரசு முக்கிய திருத்தம் மேற்கொண்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாக இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் மீது அமெரிக்க கடந்த ஜூன் 3ம் தேதி 12.5 சதவீதம் கூடுதல் சுங்கவரி விதிக்க முன்மொழிந்தது. இந்த விவகாரம் இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளும் வகையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அரசிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘கொத்தடிமை தொழிலாளர்களை பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யக் கூடாது’’ என புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அரசிதழ் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஏதேனும் ஒரு பொருள் கொத்தடிமை தொழிலாளர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பது விசாரணை அல்லது போதுமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டால், அந்த பொருளின் இறக்குமதியை ஒன்றிய அரசு எப்போது வேண்டுமானாலும் தடை செய்ய அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் 11-ஆம் அத்தியாயத்தில் ‘கொத்தடிமை தொழிலாளர்’ என்ற சொல்லுக்கான புதிய வரையறையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 1930ம் ஆண்டுக்கான கொத்தடிமை தொழிலாளர் ஒப்பந்தம் வரையறையின்படி, தண்டனை அல்லது அச்சுறுத்தலின் கீழ், ஒருவர் தன்னார்வமின்றி செய்ய நிர்பந்திக்கப்படும் எந்தவொரு வேலை அல்லது சேவையும் கொத்தடிமை தொழிலாக கருதப்படும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: