அருணாச்சலில் மழை, நிலச்சரிவு: 7 பேர் பலி, 29 பேர் படுகாயம்

 

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். அருணாச்சல் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 425 கிராமங்களைச் சேர்ந்த 97,182 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குமே ஆற்றின் மேல்நிலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் டாமின் மற்றும் பார்சி-பார்லோ வட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

அப்பகுதிகளில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அரசு ஆய்வு மாளிகை, தேவாலயம் மற்றும் முன்னணி கல்வி நிறுவனமான செயின்ட் தாமஸ் பள்ளியும் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குமே ஆற்றின் மீதான 84 மீட்டர் நீளப் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், எட்டு கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 425 கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 97,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரிடரால் விவசாயத்திற்கும் பொது உள்கட்டமைப்பிற்கும் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: