மதுரை: கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆண் கலைஞர்கள் பைஜாம அல்லது வேட்டி, சட்டை அணிந்திருந்த வேண்டும், பெண் கலைஞர்கள் சேலை, தாவணி, அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இந்த மனுக்களை விசாரணை செய்து உரிய நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கிவருகிறனர்.
இந்த நிலையில் தஞ்சை வளப்பக்குடி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வளப்பக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேரடி கருப்பசாமி கோயில் குடமுழுக்கு விழா 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். எனவே இந்த கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார். அதில் புதிதாக ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பைஜாமா அல்லது வேட்டி, சட்டை மற்றும் பெண்களுக்கு சேலை, தாவணி அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவு. குழந்தைகள் முழு உடலையும் மறைக்கும் வகையில் உடை இருக்க வேண்டும் ஆணையிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
