முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

* எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்த தேடப்படும் நபர் (லுக் அவுட் நோட்டீஸ்) சுற்றறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
* அடுத்தகட்ட விசாரணை வரையிலும், எ.வ.வேலுவுக்கு எதிராகக் கைது போன்ற எவ்விதக் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
* இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அவசர கோரிக்கையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த அரசு சார்பில் ரூ.5000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின்கீழ் கரூரில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு விதிகளை மீறி ரூ.3.5 கோடி விடுவிக்கப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, எ.வ.வேலு சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனை எதிர்த்து எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதோடு, அதுவரை கடும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கக் கூடாது எனக்கூறி அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவர் விமானநிலையத்தில் பேட்டியளிக்கும்போது, ‘‘திமுக யாருக்கும் பயந்து ஓடும் இயக்கம் இல்லை.

நான் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணைக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், அன்றுதான் நான் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்வதாக இருந்தேன். சோதனைக்கு வந்ததால், டிக்கெட்டை மாற்றும்படி சொல்லியுள்ளேன் என்று விசாரணை அதிகாரியிடம் கூறிவிட்டுத்தான் வெளிநாடு சென்றேன். ஆனால் தமிழக அரசு வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது’’ எனக் கூறினார். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், ‘முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளைய தினமே (இன்று) விசாரிக்க வேண்டும்’ என்று முறையிட்டார். இந்த கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘நாளைய தினம் (இன்று) இந்த வழக்கை கண்டிப்பாக விசாரிக்க முடியாது; வரும் புதன்கிழமை வேண்டுமானால் சூழலை கண்காணித்த பிறகு பட்டியலிட முயற்சி செய்கிறோம்’ என்று கூறி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

Related Stories: