சென்னை: அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்த செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு காணொலி குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
