மின்வெட்டு பிரச்சனையால் கோடை குறுவை சாகுபடி பாதிப்பு – விவசாயிகள் வேதனை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக போதிய தண்ணீர் இன்றி தட்டையாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்வதுடன், குறைந்த மின்னழுத்தத்தால் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி வருகிறது.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பம்ப் செட் மூலம் கோடை குருவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பயிர்கள் செழிப்பாக வள போதுமான தண்ணீரை பாய்ச்ச முடியாமல் பரிதவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். குறைந்த மின்னழுத்தத்தில் (Low Voltage) மோட்டார்கள் இயங்கும் போது, அதிக சுமை ஏற்பட்டு காயில்கள் (Coils) கருகி கூடுதலாக தங்களுக்கு செலவு வைப்பதாகவும் கூறினர்.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கருகி தட்டையாகி விட்டன, இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசிய விவசாயிகள் நன்கு வளர்ந்து வந்த நெற்கதிர்களுக்கு பாய்ச்ச போதுமான அளவு தண்ணீர் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினர். இதற்கு முக்கிய காரணம் போதிய அளவு மும்முனை மின்சாரம் தங்களுக்கு கிடைக்காததே என்று வருத்தம் தெரிவித்தனர். மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சேதத்தை கணக்கிட்டு அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Related Stories: