வேப்பனஹள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில், தற்போது முதல் போக சாகுபடிக்காக உழவு பணிகள் துவங்கி உள்ளது. வழக்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, ராகி, பட்டன் ரோஸ், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகம் விளைவிக்கப்படுகிறது. இது போக மரக்கன்றுகள், கால்நடை விற்பனையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதங்களில் வெயில் அதிகரிப்பால் நீர்நிலைகள் யாவும் வறண்டு காணப்பட்டது. ஒரு சில இடங்களில் தண்ணீர் இருந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மா விவசாயம் அதிகம். மழை பெய்தால் விவசாயிகள் உழவு பணிகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக வேப்பனஹள்ளியில் வெயில் குறைந்து காணப்படுகிறது. வெயிலால் வேப்பனஹள்ளியில் விவசாயிகள் உழவு பணியில் ஈடுபடவில்லை. மேலும், வேறு பணிகளுக்கு சென்று வந்த நிலையில், தற்போது ஆனி மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், வேப்பனஹள்ளியில் முதல போக நெல் சாகுபடி செய்வதற்காக ஆடி பட்டம் துவங்கி உள்ளது.
இதனால், நெல் நடவுப்பணிகளுக்காக விவசாயிகள், தங்கள் நிலங்களை தயார் படுத்துவதற்காக உழவு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக நிலங்களை டிராக்டர்கள் மற்றும் எருதுகளைப் பூட்டி உழவுப் பணிகளை செய்து வருகின்றனர்.தற்போது, விவசாயிகள் உழவு பணிகளில் தீவிரம் காட்டி வருவதால், இந்தாண்டு நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
