கூடலூர் : கூடலூரை அடுத்த நடுவட்டம் பஜார் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் தெற்மேற்கு பருவமழையின் காரணமாக பலத்த காற்று வீசியது. இதனால், மரக்கிளைகள் முறிந்து மின் வயர்கள் மீது விழுந்துள்ளதால் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மின்சாரம் இல்லாதாலும், போதிய அளவு மண்ணெண்ணெய் கிடைக்காததாலும் ஒரு சில வீடுகளில் டீசல் பயன்படுத்தி பாட்டில் விளக்கு எரிய வைத்து வெளிச்சம் ஏற்படுத்தி உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“பருவமழை காலங்களில் இது போன்ற மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டால் மின் ஊழியர்கள் அதனை சரிசெய்து வர 3 நாட்களுக்கும் மேல் ஆகிவிடும். மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்துவதற்கு போதிய மண்ணெண்ணெய் கிடைப்பது இல்லை.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் இரவு நேரத்தில் படிப்பதற்கும், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்டோரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இப்பகுதியில் சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால் இரவு நேரங்களில் மின்தடையால் தெருவிளக்குகள் எரியாததால் பொது மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
மழைக்காலங்களில் ஏற்படும் மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கும் வகையில், வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட மின்சார துறையினர் மாற்று ஏற்பாடாக சாலை மார்க்கமாக மின் கம்பிகள் மற்றும் கேபிள்கள் அமைத்து, பாதிப்பு ஏற்படும் காலங்களில் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், தடை இல்லாத மின்சாரம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
