நல்லம்பள்ளி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆயில் நிறுவனத்திற்கு வழங்கியதற்கு எதிர்ப்பு

*கிராம மக்கள் போராட்டம்

தர்மபுரி : நல்லம்பள்ளி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆயில் நிறுவனத்திற்கு வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரையிலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சார்பில் காஸ் குழாய் அமைக்கும் திட்டம், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வழியாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்காக நல்லம்பள்ளி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திம்மராய சுவாமி, வேட்ராய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 2.67 ஏக்கர் நிலங்கள் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மூலம் நில எடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2025ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆயில் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நேற்று நல்லம்பள்ளி அடுத்த குழிப்பட்டி தனியார் கல்லூரி அருகே சுற்றுவட்டார கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், தர்மபுரி ஆர்டிஓ கோவிந்தன், தாசில்தார் பிரசன்னமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து பாகல்அள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கூறுகையில், இந்த பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு வருவாய்த்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்த இடம் விவசாயத்திற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் என பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. பொதுமக்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் ஆயில் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலத்தில் கட்டுமான பணிகளும் நடக்கிறது. இந்த நிறுவனம் இங்கு வந்தால் சுற்றுவட்டாரத்தில் 4 கி.மீ., தொலைவுக்கு பட்டாசு வெடிக்க முடியாது. ஒரு பண்டிகை கொண்டாட முடியாது.

பட்டாசு வெடிக்க தடை விதித்து விடுவார்கள். எனவே, அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக முழுமையான ஆய்வு செய்து, ஆயில் நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். நல்லம்பள்ளி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு, பல அரசுத்துறைகளின் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அந்த அரசு அலுவலகங்களுக்கு இந்த இடத்தில் இடம் ஒதுக்க, அரசு முன்வரவேண்டும் என்றார்.

Related Stories: