*அகலப்படுத்த கோரிக்கை
கூடலூர் : கூடலூரில் இருந்து கல்லிங்கரை குற்றி முச்சு வழியாக செறுமுள்ளி,பொழம்பட்டி,போஸ்பாரா, முதுகுளி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் குற்றி முச்சு பகுதி வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றின் மீது கடந்த பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட சிறிய குறுகிய பாலம் இதுவரை சீரமைக்கப்படாமலும் அகலப்படுத்தப்படாமலும் உள்ளது.
மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாலம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் வேகமாக செல்ல முடியாததால் வெள்ளநீர் தேங்கி அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகிறது. மேலும் தொடர் மழை காலங்களில் இந்த பாலத்தின் மீது வாகனங்களை இயக்குவதும் ஆபத்தான செயலாக உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான மாணவர்களும் உள்ளூர் மக்களும் தினமும் பல்வேறு தேவைகளுக்கு சென்றுவர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பாலம் மிகவும் குறுகலாக இருப்பதாலும், ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்பதாலும், மழைக்காலத்தில் பாலத்தின் மேலாக மழை நீர் செல்வதாலும், இந்தப் பாலத்தை உயரமாக அமைத்து அகலப்படுத்தி புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
