கோயில் உண்டியல் காணிக்கையில் திருட்டு அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராஜினாமா ஏற்பு: 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம்

அயோத்தி: அயோத்தி உண்டியல் காணிக்கை திருட்டு விவகாரத்தில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமாவை அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. அயோத்தி ராமர் கோயிலுக்காக திரட்டப்பட்ட நிதி மற்றும் உண்டியல் காணிக்கையில் மெகா திருட்டு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் உபி அரசு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோயில் ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வீடுகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நன்கொடை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமா குறித்து முடிவெடுக்கவும், பிற விவகாரங்களை விவாதிக்கவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் கூட்டம் ராம ஜென்மபூமி வளாகத்திற்குள் உள்ள விருந்தினர் மாளிகையில் பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கியது.

இதில் அறக்கட்டளைத் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உட்பட 9 நிரந்தர உறுப்பினர்களில் 7 பேர் கலந்துகொண்டனர். பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சுமார் 3 மணிக்கும் மேலாக நடந்த கூட்டம் மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் கிரி, பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமாக்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,’ அறக்கட்டளையின் விதிமுறைகளின்படி, இந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. நாங்கள் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டோம். சம்பத் ராய் ராஜினாமாவை தொடர்ந்து கிருஷ்ணா மோகன் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாங்கள் மீண்டும் 22 ஆம் தேதி கூடுகிறோம். அதற்குள் சிறப்பு விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். தவறு செய்ததாகக் கண்டறியப்படும் எவரையும் அறக்கட்டளை பாதுகாக்காது.

திருட்டு என்பது திருட்டுதான். சிறப்பு விசாரணைக் குழு தனது பணியைச் செய்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்கள் அறியப்பட்டவர்களாகவோ அல்லது அறியப்படாதவர்களாகவோ இருந்தாலும், அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்றார். அயோத்தியில் நடந்த மெகா மோசடி தொடர்பாக பேசிய அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பங்கஜ் ஜெய்ஸ்வால், ‘‘நன்கொடை எண்ணும் பணியின்போது நடந்ததாகக் கூறப்படும் திருட்டு அவமானகரமானது.இந்தச் சம்பவம் வேதனையானது ’’என்றார்.

* பாஜவுக்குள் நிலவும் அதிகாரப்போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது: அகிலேஷ்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ டபுள்-இன்ஜின் அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை; மாறாக, அவற்றுக்கிடையே மோதல் நிலவுகிறது. அங்கு அதிகாரப் போட்டி உள்ளது, அவர்களுக்கு நம்பிக்கை அல்லது பக்தி மீது எந்த அக்கறையும் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் செல்வத்தின் மீதான மோகத்தால் கண்மூடித்தனமாகிவிட்டனர். இந்தச் சர்ச்சை ஆளும் தரப்பிற்குள் நிலவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை வெளிப்படுத்துகிறது ’ என்றார்.

* தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்க 3 பேர் குழு
அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் அறக்கட்டளைக்கான தலைமை நிர்வாக அதிகாரியை கண்டறிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி மற்றும் அறங்காவலர் சுரேஷ் ஹவாரே ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: