இந்தியாவின் ஆதரவு எங்களுக்குதான்: இஸ்ரேல் பிரதமர் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: ஈரான் மீதான போர் நிறுத்த உடன்படிக்கை விவகாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்த சூழலில் “அமெரிக்காவை தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்தி வாய்ந்த நட்பு நாடுகளின் ஆதரவு இல்லை“ என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற சிறிய நாடுகளின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது” என கூறினார்.

நெதன்யாகுவின் கருத்து குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “நெதன்யாகு சொல்வது தவறு. சந்தேகத்துக்கிடமின்றி, இஸ்ரேல், மோடானி (மோடி-அதானி) சாம்ராஜ்யத்துடன் பிணைந்துள்ளது. நரேந்திர மோடியும் நெதன்யாகு மீது கண்மூடித்தனமான பற்று வைத்துள்ளார்.

ஆனால், காசாவில் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகள், விஸ்வகுரு என தன்னைத்தானே அழைத்து கொள்ளும், விருதுகளுக்கு ஏங்கும் ஒருவர், இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் பற்றி வாய் திறக்காமல், கல் நெஞ்சத்துடன் மவுனமாக இருப்பது, இந்தியாவின் நாகரிக விழுமியங்களுக்கும், கொள்கைகளுக்கும் செய்யும் துரோகம். இது முற்றிலும் மனசாட்சிக்கு முரணான செயல்.

நெதன்யாகுவிடம் இருந்து சான்றிதழ் பெறுவது ஒன்றும் பெரிய கவுரவமல்ல. ஏனெனில், உலகளவில் அவரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக, வௌ்ளை மாளிகையில் உள்ள பிரதமர் மோடியின் நண்பரிடமிருந்தே(அமெரிக்க அதிபர் டிரம்ப்) அவர்(நெதன்யாகு) விரக்தியையும், கோபத்தையும் சம்பாதித்துள்ளார்” என கூறியுள்ளார்.

Related Stories: