ஐசியூவில் இந்திய கல்வி அமைப்பு: ஒன்றிய அரசு குறித்து காங். விமர்சனம்

புதுடெல்லி: இந்தியாவின் கல்வி அமைப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிர சிகிச்சைப்பிரிவில் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவரணி பொறுப்பாளர் கன்னையா குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ராகுல்காந்தி கோட்டாவில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களிடையே ஒரு விளக்கக்காட்சியை அளித்தார்.

இப்போது நாங்கள் அந்த இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து ஆலோசனைகளை திரட்டி வருகிறோம். வரும் நாட்களில் கல்வி அமைப்பை மாற்றி அதை சரிசெய்வதற்கான கல்வி சாசனத்தை நாங்கள் உருவாக்குவோம். மோடி அரசு இந்தியாவின் கல்வி அமைப்பை தீவிர சிகிச்சைப்பிரிவில் தள்ளிவிட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். வினாத்தாள் கசிவு மாபியாவுடன் அவருக்கு உள்ளதாக கூறப்படும் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு குழு அமைத்திருந்தது.

ஆனால் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தன்னிச்சையாக தேசியத் தேர்வுகள் முகமையை உருவாக்கி உள்ளது. இளைஞர்களுக்கான வழக்கமான வேலைவாய்ப்பு அட்டவணையும், தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கான கல்விசார் கால அட்டவணையும் வெளியிடப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories: