மதுரை: பைக் டாக்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசல் நிகழ்ந்த பகுதிகளில் பைக் டாக்சி சேவை என்பது மிகவும் உபயோகமாக உள்ளது.
பல்வேறு நகரங்களில் பைக் டாக்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய அரசு ராபிடோ, உபர் போன்ற செயலிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் இதைப்போன்று பைக் டாக்சிகளில் புக் செய்து மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் பைக் டாக்சி ஓட்டி செல்லும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். எனவே பைக் டாக்சியை தமிழகத்தில் இயக்குவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி. வி.கார்த்திகேயன், மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறுகையில்; இந்தியாவில் பலபகுதிகளில் பைக் டாக்சி சேவை செயல்பட்டு வருகிறது மற்றும் மிகவும் உபயோகமாக உள்ளது. அதே நேரத்தில் நம் மாநிலத்தில் பைக் டாக்சியை செயல்படுத்த இயலுமா, மோட்டார் வாகன சட்டப்படி இதற்கு அனுமதி வழங்க இயலுமா என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
