மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன, பூஜை கட்டண உயர்வு தொடர்பான விவரத்தை இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினுடைய முக்கிய சாராம்சம் என்பது இந்து சமய அறநிலை துறையின் கீழ் வரக்கூடிய கோவில்களில் தரிசன, பூஜை கட்டண உள்ளிட்டவற்றை உயர்த்த வேண்டும் என்றால் கோவில் தக்கர் அல்லது அரங்காவலருடைய குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
மக்களின் கருத்து கேட்ட பின்புதான் விலையை உயர்த்துவதா அல்லது பழைய கட்டண விவரங்கள் நீடிப்பதா என்பது தெரியும். ஆனால் அதுபோன்று இல்லாமல் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசன கட்டண உயர்வு தொடர்பாக பக்தர்களிடம் கருத்து எதுவும் கேட்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களிடம் கருத்து ஏதும் கேட்காமல் தரிசன, பூஜை கட்டண உயர்த்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் வெளியிடப்படவில்லை, செய்தி தாள்களில் வெளியிடப்படவில்லை. திடீரென கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது சட்டவிரோதம் எனவே அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மக்களிடம் விரிவாக கருத்து கேட்ட பின்புதான் கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் தரிசன கட்டணங்களை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துகூறுவதற்கான அவகாசத்தை நீடித்துள்ளது.
கருத்து கூறுவதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், மக்கள் கருத்து கூறுவதற்கான கால அவகாசத்தை வரும் 21-ம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
