சேலம்: வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“சேலம் மாவட்டம், தும்பல் ஊராட்சிக்கு உட்பட்ட வாழப்பாடி – ஆத்தூர் – கருமந்துறை நெடுஞ்சாலைப் பகுதியில் சந்தைத் திடலும், கோயிலும் அமைந்துள்ளன. இந்த நெடுஞ்சாலையின் ஓரமாக அரசு மதுபானக் கடை ஒன்று அமைந்துள்ளது. இக்கடைக்கு வரும் மதுப்பிரியர்களால் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் வீண் வாக்குவாதம் செய்வதோடு, பள்ளி மாணவர்களிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும், சந்தைக்கு வரும் வியாபாரிகளிடம் சண்டை போடுவது போன்ற சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.”
இது குறித்து, மலைவாழ் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் பொதுமக்கள், பெண்கள் எனப் பலரும் திரண்டு பல்வேறு அதிகாரிகளிடமும், சேலம் மாவட்ட அமைச்சரிடமும் பலமுறை புகார் மனு அளித்தனர்.
இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், அந்த மதுபானக் கடையின் அருகே திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த மதுபானக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அவர்கள் கண்டன முழங்கங்களை எழுப்பினர்.
