தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். தமிழ்நாடு அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தன. நெல் மூட்டைகள் சரிந்து பெண் தொழிலாளி சின்னபொண்ணு உயிரிழந்துள்ளார். சகுந்தலா என்பவர் காயம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது. இங்குக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். தற்போது அங்கு ஏராளமான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தற்காலிக ஊழியர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திடீரெனச் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் வேகமாக ஓடத் தொடங்கினர். அதே கிராமத்தைச் சேர்ந்த காசிநாதனின் மனைவி சின்னப்பொண்ணு (வயது 51) மற்றும் சகுந்தலா ஆகிய இருவர் மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தது. இதில் சின்னப்பொண்ணு மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த சகுந்தலா மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்த தஞ்சாவூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான சின்னப்பொண்ணுவின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நெல் மூட்டைகள் திடீரெனச் சரிந்து விழுந்தது எவ்வாறு என்பது குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
