புழல், ஜூன் 29: செங்குன்றம் அடுத்த பழைய பம்மதுகுளம் சரத்து கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ராகுல் (21), கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சரத்து கண்டிகை கிராமத்தில் 3 சிறுவர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அதை பார்த்து ராகுல் சிறுவயதிலேயே ஏன் மது குடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ஆத்திரமடைந்த 3 சிறுவர்களும், அவர்கள் பைக்கில் போட வைத்திருந்த பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி தீ வைத்து ராகுல் மீது வீசினர்.
இதில் ராகுலுக்கு கழுத்து மற்றும் காதில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ராகுலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி 3 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூரில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
