கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் திடீர் மரணம்

 

சென்னை, ஜூன் 22: கிரிக்கெட் விளையாடியபோது ஐடி ஊழியர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது, சக நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஓ.எம்.ஆர் சாலையில் ஏகாட்டூர் என்ற இடத்தில் உள்ள ஹிராநந்தனி குடியிருப்பில் வசித்து வந்தவர் வைத்தியநாதன் (43). இவர் ப்ரீலான்ஸ் முறையில் ஐடி நிறுவன வேலைகளைச் செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வைத்தியநாதன், வழக்கம்போல் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார்.

பிற்பகல் சுமார் 2 மணியளவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டுக்காரரான சாய் என்பவர், உடனடியாக வைத்தியநாதனை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தபோதே ஏற்பட்ட மாரடைப்புதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: