காவல் உதவி மையம் அருகே துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

 

 

சென்னை, ஜூன் 29: பொன்னேரியில் மகளிர் காவல் உதவி மையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (60). இவர் சென்னையில் பேன்சி ஸ்டோர் நடத்தி தனது மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். மேலும் வீட்டின் முதல் தளத்தில் சத்தியநாராயணன் குடியிருந்து வரும் நிலையில் காலியாக உள்ள கீழ் தளத்தை 2 நாட்களுக்கு முன் வாடகைக்கு எடுத்தவர்கள் பால் காய்ச்சி குடியேறி உள்ளனர். இவரது மனைவி, குழந்தைகளுடன் வெளியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியநாராயணன் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு எதிரே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் தனது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 70 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து வீட்டின் அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் இருவர் அந்த தெருவில் நடமாடியது தெரிய வந்தது. மேலும் கொள்ளை சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததை கேள்விப்பட்டு தாய் வீட்டிற்கு சென்ற சத்தியநாராயணன் மனைவி வீடு திரும்பியவுடன் கதறி அழுதார். மேலும் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகள் கொள்ளை போனதால் குடும்பமே கதறி அழுதது. அண்மையில் பொன்னேரி வெண்பாக்கத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக மகளிர் பிங்க் காவல் உதவி மையம் திறக்கப்பட்ட நிலையில், அதன் அருகே 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: