பிரான்சில் கடும் வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி: பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

பெர்லின்: பிரான்ஸ் நாட்டில் கடுமையான வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வெப்ப அலையால் நாடு முழுவதும் வெப்ப நிலை சாதனை அளவாக பதிவாகி உள்ளது. பாரிஸ் நகரில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியது.

நாட்டின் மற்ற பகுதிகளில் வெப்பம் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளன. பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடுமையான வெப்பத்தால் மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடுமையான வெப்ப அலையால் கடந்த புதனன்று 1200 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த இரு நாள்களில் 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகமாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். மொத்த உயிரிழப்புகளில் 85 சதவீதம் பேர் இந்த வயது பிரிவைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக வெப்பத்துக்கு பலியானோர் எண்ணிக்கையை விட இந்த ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். மேலும் வெப்ப நோய்களால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதித்துள்ளன. பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி,ஜெர்மனி,கிரீஸ்,டென்மார்க் நாடுகளிலும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: