ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?

வாஷிங்டன்: ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவதற்கும் இஸ்ரேல் தனது படைகளை காசாவில் இருந்து திரும்ப பெறுவதற்கும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் கையெழுத்தான 9 மாதங்களுக்கு பிறகு வெள்ளை மாளிகையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தியதில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் பணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் காசாவில் உள்ள பல நகரங்கள் சின்னாபின்னமாயின. 73000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல மாதங்கள் நீடித்த போருக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. காசாவில் அமைதியை ஏற்படுத்த அமைதி வாரியம் அமைக்கப்பட்டது. ஆனாலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது. இதனால் அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியானது. இந்நிலையில், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத் தளத்தில் டிரம்ப் பதிவிடுகையில், காசாவின் ஹமாசும் ஆயுதம் ஏந்திய மற்றக் குழுக்களும் மொத்தமாக ஆயுதங்களைக் கைவிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அமைதிக் குழு எட்டியுள்ளது. இது, அமைதியையும் பாதுகாப்பையும் தொடரச் செய்வதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும். ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்ட பிறகு இஸ்ரேலியப் படைகள் வெளியேறும்.

பிறகு காசாவை அதன் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கச் செய்ய சர்வதேச படை, புதிதாக அமைக்கப்படும் பாலஸ்தீனக் காவல் படையுடன் இணைந்து செயல்படும். சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எகிப்து, கத்தார், துருக்கி ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்குத் நன்றியை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

* 20 அம்ச திட்டம்
கசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அதில் ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்கவும்,சுரங்க பாதைகளை அழிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுதல், புதிய தொழில்நுட்ப வல்லுனர் குழு தலைமையில் புதிய அரசு அமைத்தல், சர்வதேச பாதுகாப்பு படையை நிலை நிறுத்துதல், போரில் சிதைந்த பாலஸ்தீன நகரங்களை மீண்டும் கட்டியெழுப்புவது உள்ளிட்ட 20 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

* இஸ்ரேல் சந்தேகம்
இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஹமாஸ் படை ஆயுதங்கள் ஒப்படைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்ற சந்தேகம் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related Stories: